தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை ‘அட்கின்ஸ் டயட்’. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் கொழுப்புச்சத்தும் தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது. அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்: ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும். நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.