எனிமா

உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை மாற்றத்தின் வழியாகவே நாம் உடலைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்கிறோம்.

அப்படி, செல்கள் உதிர்ந்து புதிது உருவாகும்போது உடலில் கழிவுகள் தோன்றுவது இயல்பே. அதுபோலவே, நாம் உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றுமேகூட உடலில் கழிவுப் பொருட்களை விட்டுச்செல்கின்றன. இவற்றை எல்லாம் நம் உள் உறுப்புகள் முறையாகச் சுத்திகரித்தாலும் சில கழிவுகள் நம் உடலிலேயே தங்கியிருக்கும். இந்தக் கழிவுகளை அகற்றும் முறைமையே டீடாக்ஸ் எனப்படும் நச்சு நீக்கம்.

நம் மரபில் நச்சு நீக்கத்துக்கு பல வழிமுறைகள் இருந்தன. வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மசாஜ் செய்வது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது, உண்ணா நோன்பு இருப்பது, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து குடிப்பது எல்லாம் நச்சு நீக்கும் நுட்பங்களேதான். இப்படியான டீடாக்ஸ் முறைகளில் எனிமா கொடுப்பதும் ஒன்று. அந்தக் காலத்தில் இப்படி உடலைச் சுத்தம் செய்வதற்கு என்றே ஒரு நாளை ஒதுக்கினார்கள். வீட்டைச் சுத்தம் செய்யக்கூட நேரம் இன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். வயிற்றைச் சுத்தம்செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு எனிமா தேவை என்று பார்ப்போம்.

எனிமா என்றால் என்ன?

நாம் உணவு செரிமானம் ஆனபிறகு அதன் கழிவுகள் மலமாக வெளியேறிய பிறகும் சில நேரத்தில் பெருங்குடலிலேயே சில கழிவுகள் தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, டிப்ரஸன், உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைச் சுத்தம்செய்யும் சிகிச்சைமுறைக்குத்தான் ‘எனிமா’ என்று பெயர். அதாவது, பெருங்குடலை திரவம் கொண்டு அலசி சுத்தப்படுத்தும் மருத்துவமுறை இது.

பேதி மாத்திரையும் எனிமாவும்

எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்ற செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள பெருங்குடல் பகுதியின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனையே தரும். பேதி போல நீண்ட காலம் பயன்படும் முறை அல்ல எனிமா.

எனிமா யாருக்குக் கொடுக்கப்படும்?

  • தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள்.
  • ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள்.
  • முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் நீடித்து நிலைப்பவர்கள்.
  • பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்.
  • மலம் கழிக்க சிரமப்படும் வயதானவர்கள்.
  • ட்ரேசன் தெரப்பி (Hydration therapy) செய்யவும் எனிமா கொடுக்கப்படும்.

எனிமா வகைகள்

எனிமாவில் மூன்று வகை உள்ளன. ஒன்று கிளென்ஸிங் எனிமா (Cleansing enema). இது, சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கோலனோஸ்கோப்பி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளுக்கு முன்பு இது செய்யப்படுகிறது. மலச்சிக்கல், அதனால் ஏற்படும் தலைவலி போன்ற பிரச்சனைகள் இந்த முறையால் குணமாகின்றன. இந்த எனிமாவில், தண்ணீருடன் ஏதாவது ஒரு மலமிளக்கி மருந்தைக் கலந்து, ஆசனவாயின் உள்ளே செலுத்தப்படும். இந்த எனிமா கொடுக்கப்பட்டதும், நீருடன் மற்ற கழிவுகளும் வெளியேறிவிடும்.

இரண்டாவது வகை ரெட்டென்ஷன் எனிமா (Retention enema) எனப்படும். இந்த எனிமாவும் கழிவுகளை வெளியேற்றுவதற்காகத்தான். ஆனால், இந்த திரவம் உள்ளே செலுத்தப்பட்டு சிறிது நேரம் உள்ளே நிறுத்தப்படும். இதன்மூலம், அந்த திரவத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளே இழுத்துக்கொள்ளப்படும். வீட்டில் எடுத்துக்கொள்ளும் இந்த வகை எனிமாவுக்காக காபி போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து இப்படிச் செய்வதால் ஆசனவாயில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுகின்றன.

மூன்றாவது வகை பேரியம் எனிமா (Barium enema) எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எடுத்து, குடலின் உட்புறம் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கும் முன்பு குடலைச் சுத்தம் செய்வதற்காக இந்த எனிமா கொடுக்கப்படுகிறது. எனிமாவுக்கான மருத்துவப் பொருட்கள் சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலும் வெந்நீர் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. சமயங்களில், மூலிகை எண்ணெயோ நெய்யோ உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.