திருவண்ணாமலை “கிரிவலம்” எந்த நாளில் எப்படி வர வேண்டும்?

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று .


பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும் . உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென, மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல் , காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும் .
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும் .


கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
அருணாசலத்தை வலம் வரவேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்துவைத்தால், யாகம் செய்யும் பலன் கிடைக்கும் .


இரண்டாம் அடி எடுத்து வைத்தால், சர்வதீர்த்தமாடிய பலன் கிடைக்கும் மூன்றாம் அடியில் மகத்தான தானம் செய்த பலன் கிடைக்கும் . கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் . அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று வலம் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா ?


அன்றுதான் அன்னை பராசக்தி, அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அன்று சந்திரன் சூரியனிடம் இருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, அதை வெளியிடும் பூர்ண நிலாவாக உலா வருகிறான். அந்த ஒளி, மலை மீது பட்டு பிரதிபலிக்கும்போது, அது நமது உடலுக்கும் நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது. இதனால் பௌர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.


இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம். எந்தக் கிழமையில் வலம் வந்தால் என்ன பலன்? ஞாயிற்று கிழமை – சிவலோக பதவி கிட்டும் .


திங்கட்கிழமை – இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .
புதன் கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை – பிறவிப்பிணி அகலும். அஷ்டமி – தீவினைகள் போகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு.

மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகளும் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால், கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என்று கூறியுள்ளார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் அருளும் இறைவா போற்றி.

Leave a Reply

Your email address will not be published.