நாளை கருட பஞ்சமி.

கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல் கொண்டவர் கருடாழ்வார். காரணம் திருமாலின் வாகனம் கருடன் என்றால் கருடரின் வாகனம் வாயு! திருமாலின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன்.

ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி திதி நாள் கருட பஞ்சமி என்று போற்றப்படுகின்றது. இது கருடாழ்வாரின் பிறவித் திருநாள் என்றும், கருடனின் தாயான விநதையைக் காக்க இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்த நாளே கருட பஞ்சமி என்றும் கூறப்படுகிறது.

கருடனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்த கருட பஞ்சமி நாளில் கருட பகவானை வழிபாடு செய்து வணங்குவதால், பகைமை உணர்வு நீங்கும். கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும்; வாழ்க்கைச் செழிக்கும் என்கிறது ஈஸ்வர சம்ஹிதை. மனவியாதி, வாய்வு, இதய நோய், விஷ நோய்கள் தீரும்.

உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும், பலமும் அதிர்ஷ்டமும் கொண்ட பிள்ளைகளைப் பெறவும் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து கருடனைப் போற்றுவார்கள்

கருட பஞ்சமி நாளின் அதிகாலை எழுந்து நீராடி வீட்டையும் பூஜையறையையும் தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நுழை வாசல் கதவின் அருகே உள்ள சுவரில் மஞ்சள், குங்குமம் தடவி வைக்க வேண்டும். இது மங்கல வரவேற்பு என்பதால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறையும். முடிந்தவர்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடரை வழிபடலாம்.

அதேபோல் வீட்டுக்கு அருகே உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் ஊற்றி வணங்கி, புற்று மண்ணை பிரசாதமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். கருட பஞ்சமி நாளில் சிலர் மஞ்சள் சரடில் மலர் ஒன்றை வைத்து அதை கையில் கட்டிக்கொள்வார்கள். வீட்டின் பூஜை அறையில் அம்பிகைக்கு முன்பு கருடரையும் நாகராஜரையும் எண்ணி வழிபடலாம். அப்போது ‘ஓம் கருடாய நம: ஓம் நாகராஜாய நம:’ என்று சொல்லி வழிபடலாம்.

இதனால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படுவோர் உடனே பலன் பெறுவர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு சுபிட்சமாக இருக்கும்; சகல பாக்கியங்களும் இந்நாளில் கருடரை வழிபட இல்லங்களுக்கு வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published.