கோவில்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுவது ஏன்? .

கோவிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோவிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.

சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இந்த மரங்கள் பயன்படுத்துவதில்லை.

கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும்.

கொடி மரத்தின் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ;ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மலவயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.